top of page
  • Facebook
  • Twitter
  • Instagram

லட்சுமி ராமசந்திரன் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில், ஆசிரியரான தாய்க்கும் மத்திய அரசு ஊழியரான தந்தைக்கும், பிறந்தவர். அவரும் அவர் சகோதரரும் முதலில் காரைக்குடியிலும் பின்னர் மதுரையிலும் வளர்ந்தனர். அவருடைய 14 வயதில் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. லட்சுமியின் தந்தை இள வயதில் நேருவின் இந்தியக் கனவினால் ஈர்க்கப்பட்டவர். அவர் அந்த உணர்வை லட்சுமிக்கும் வளர் பருவத்தில் விதைத்து நாடு, மக்கள் ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்தார்.

 

வளரும் பருவத்தில் லட்சுமி தன்னைச் சுற்றி நடப்பவற்றை பார்வையாளராகவும், படித்து அறிந்து சுற்றத்தாரோடு பேசியும் விவாதித்து அறிபவராகவும் வளர்ந்தார். ‘இளம் பிராயத்தில் சோஷலிசத்தால் ஈர்க்கப்படாதோர் இதயமில்லாதோர்’ என்ற பழமொழிக்கு ஏற்ப லட்சுமியும் ஆரம்ப காலத்தில் சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்டார். அதுவே பரவலான மக்கள் நலன் காக்கும் அரசியல்-பொருளாதார சட்டகம் என்று கருதினார். 1991-இல் இந்தியா மேற்கொண்ட பொருளாதார தாரளமயமாக்கல், பல்லாயிரக் கணக்கான இந்தியர்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்ததைப் பார்த்து அவரும் தன் அரசியல், பொருளாதார புரிதல்களை மாற்றிக் கொண்டார். ஆனாலும், சமத்துவம், சமூகநீதி, அனைவருக்கும் வாய்ப்பு என்ற அடிப்படை அறவுணர்வைச் சார்ந்து லட்சுமியின் அரசியல் சித்தாந்தம் தொடர்கிறது.  

 

90-களில் இந்தியாவும் உலகமும் பல மாற்றங்களை சந்தித்த காலக் கட்டத்தில் லட்சுமி, கணிதத்தில் இருக்கும் ஆர்வத்தினால் உந்தப்பட்டு, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும் அதன் பின் ஐ.ஐ.டி-யில் கணிதத்தில் முதுகலைப் பட்டமும் பெற்று தேர்ச்சியடைந்தார். கணிதத்தில் லட்சுமிக்கு இருக்கும் ஆர்வமும் தேர்ச்சியும் ஆசிரியர்கள் அவர் மேலும் ஆராய்ச்சித் துறையில் சென்று மிளிர்வார் என்ற எதிர்ப்பார்ப்புக்கு மாறாக கணினித் துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.

 

2003-இல் லட்சுமி தன்னோடு ஐ.ஐ.டி-யில் பயின்ற தோழரான சுவாமியை மணந்தார். இருவரும் அதே வருடம் அமெரிக்காவுக்குச் சென்றனர். அங்கே தற்செயலான ஓர் உரையாடலினால் தூண்டப்பட்டு அமெரிக்க பள்ளிக் கல்வியைப் பற்றி மேலும் அறிய ஆவலானார் லட்சுமி. அந்த ஆவல் அடுத்த பத்து வருடம் அவர் வாழ்க்கையில் பிரதானத் தேடலானது. அந்த காலத்தில் வெளிவந்த, தாமஸ் ஃப்ரீட்மேன் எழுதிய “The World is Flat” புத்தகம் இந்தியா பற்றி பலருக்கும் ஆர்வத்தைத் தூண்டியதோடு, உலகம் எப்படி நவீன இணைய வசதிகளாலும் வர்த்தகத்தாலும் சுருங்கி பிணைவுறுகிறதென்ற கருத்தியலையும் பரவலாக்கியது. மேற்சொன்ன கருத்துகள் தன் வருங்கால வாழ்க்கையையும் தொழில் சார்ந்த தேர்வுகளையும் வடிவமைக்க லட்சுமிக்கு உதவியது.  சியாட்டில் நகரில் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராக பணி செய்தது அவருக்கு கற்றலிலும் கற்பித்தல் முறைகளிலும் நவீன உத்திகளை அறிமுகம் செய்தது. பல்வித கலாச்சாரச் சூழலில் மாணவர்கள் கற்றதும் அவர்களுக்கு கற்பித்ததும் லட்சுமிக்கே ஒரு பயிலும் அனுபவமானது.

 

2007-இல் லட்சுமியின் குடும்பம் (இப்போது முதல் பெண் குழந்தை சரோஜினியையும் சேர்த்து), சென்னைக்குத் திரும்பியது. அவர் ஒரு கல்வித் தொழில் நுட்ப (Ed-Tech) நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பணி நிமித்தமாக தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கிருக்கும் 700 அரசுப் பள்ளிகளுக்கு தொழில் நுட்பங்களையும் கற்பித்தல் முறைகளையும் எடுத்துச் சென்று செயல்படுத்தினார். தென்னாப்பிரிக்காவும், இந்தியா போன்றே, வசதிகள் குறைவான பள்ளிகளை சமாளிக்கவும், பெருகி வரும் நடுத்தர வர்க்கத்தின் கல்வித் தேவைகளைப் பூர்த்திச் செய்யவும் தத்தளித்து முயல்கின்றது என்பது லட்சுமிக்கு ஆர்வமூட்டுவதாகவும் புதியப் புரிதல்களை அளிப்பதாகவும் இருந்தது. அந்தச் சூழலில் அவர் நெல்சன் மண்டேலா, ஸ்டீவ் பிக்கோ, நிறவெறிக்கு எதிரான தென்னாப்பிரிக்கர்களின் போராட்டம் ஆகியனப் பற்றி தேடித் தேடிப் படித்து அறிந்தார்.

 

ராகுல் காந்தி 2009-இல் இளைஞர் காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சி உயிரூட்டியது லட்சுமியின் கவனத்தை ஈர்த்தது. திருவான்மியூரிலிருக்கும் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் சென்று கட்சியில் உறுப்பினராக சேர்ந்த நாளைப் பற்றி இப்போதும் ஒரு புன்சிரிப்போடு நினைவுக் கூர்வார் லட்சுமி.

 

கிருஷ்ணா என்ற பெயரிட்ட இரண்டாம் பெண் குழைந்தையோடு குடும்பம் விரிவடைய, 2014-இல் தன் தனியார் துறை வேலையை ராஜினாமா செய்து விட்டு சமூகத் துறையில் லட்சுமி ஈடுபட்டார். இது வரை படித்தறிந்த வறுமை, சமூகப் பிரச்சனைகளை இப்போது இன்னும் நெருக்கமாகக் கண்டு உணர ஆரம்பித்தார். சென்னையில் தியஸோபிக்கல் சொஸைட்டி நடத்தும் ஆல்காட் பள்ளியில் ஆசிரியராகவும் நன்கொடை சேகரிக்கும் ஒருங்கிணைப்பாளராகவும் லட்சுமி சேர்ந்தார். அப்போது வறுமையில் உழலும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கல்விப் பயிற்றுவிப்பதில் நீண்ட கால அனுபவம் கொண்ட திருமதி லட்சுமி சூர்யநாராயணன் அவருக்கு வழிக்காட்டுபவராக அமைந்தார். இருவரும் சேர்ந்து பள்ளிக்கு சேகரித்த நன்கொடை அப்பள்ளியின் 130 வருட வரலாற்றில் புதிய சாதனை.

 

காங்கிரஸ் 2014-இல் மிகப் பெரும் அரசியல் பின்னடைவைச் சந்தித்தது. 10 வருடம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்காக முன்னெடுத்தப் பல முயற்சிகளும் அதன் பலன்களும் வாக்காளர்களிடம் போதிய புரிதல் இல்லாமை தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணமாயின. (அந்த பத்து வருட ஆட்சியில் 140 மில்லியன் இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழிருந்து மேலெழுந்தனர் என்று ஐ.நா சபையின் புள்ளி விபரம் சொல்கிறது). இத்தகை அரசியல் பின்னடைவு லட்சுமியை சோர்வுறச் செய்யாமல் மாறாக அதிக ஊக்கத்துடன் அரசியலில் இன்னும் ஆழ்ந்துச் செயல்படத் தூண்டி, அவர் மகளிர் காங்கிரசில் தீவிர செயல்பாட்டில் இறங்கினார்.

 

அடித்தள அரசியல் செயல்பாட்டில் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்த லட்சுமி, தலித் ஆய்வாளர்கள், செயல்பாட்டாளர்கள், செயற் குழுக்கள், கிராமப்புற கல்வியாளர்கள், தொழில் முனைவோர் என்று பலத் தரப்பட்ட மனிதர்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அத்தொடர்புகள் அவரின் புரிதல்களை விரிவுப் படுத்தின. அரசின் நலத் திட்டங்கள் அதற்குரியவர்களுக்கு சென்றடைய வகை செய்யும் சமூக நிறுவனம் ஒன்றிலும் பங்காற்றினார்.

 

மேற் சொன்ன செயல்பாடுகள் தமிழ் நாட்டின் பல இடங்களுக்கு பயணித்து கிராமப்புற நிர்வாகிகள் (V.A.O’s), தாசில்தார்கள், நகர நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பணியாற்றவும், அதன் மூலம் சமூகங்களின் தேவைகளையும் நிர்வாகங்களையும் புரிந்துக் கொள்ளும் வாய்ப்புகளை லட்சுமிக்கு அளித்தன.

 

கட்சியின் அடித்தளத் தொண்டர்களை தலைமையோடு இணைக்கும் ‘சக்தி’ என்ற செயல் திட்டத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக 2018-இல் லட்சுமி நியமிக்கப்பட்டார். அவர் செயல்படுத்திய தொடர்பு முறைமைகளும் திட்டங்கள் பற்றிய தொடர் கவனிப்பும் தமிழகத்தில் ‘சக்தி’ திட்டம் மூலமாக பலரும் கட்சியில் இணைய வகைச் செய்தது.  அதே சமயம் தொலைக்காட்சியிலும் மற்ற ஊடகங்களிலும் அதிகாரப் பூர்வமாக கட்சியின் சார்பில் (தமிழிலும், ஆங்கிலத்திலும்) பிரதிநிதியானார். 2021-இல் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாற்றியமைக்கப்பட்ட போது லட்சுமி கட்சியின் பொதுச் செயலாளர்களுள் ஒருவராகவும், கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களுள் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். 

 

2021 தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஈரோட்டிலும் தென்காசியிலும் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்வுகளை ஒருங்கிணைத்ததில் லட்சுமி முக்கியப் பங்காற்றினார். அந்நிகழ்வுகளில் ராகுல் காந்தி நெசவாளர்கள், சிறு தொழில் முனைவோர் ஆகியோரோடு உரையாடி அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். அந்நிகழ்வுகள் ஊடகங்களில் வெகுவாகப் பாரட்டப்பட்டு பரவலான கவனத்தை ஈர்த்தன.

 

நண்பர்களோடு இணைந்து லட்சுமி தொடங்கிய “காமராஜர் கல்வி நிலையம்” என்ற அமைப்பின் மூலம் கல்வித் தொடர்பான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். கல்வி சம்பந்தமான நிகழ்வுகள், அது தொடர்பான செயல்பாடுகளில் இன்றும் அவர் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.

 

லட்சுமி ராமசந்திரனுக்கு கனவு ஒன்றுண்டு. அக்கனவு இந்தியா என்கிற தேசம் எல்லா குடிமக்களும் - மதம், சாதி, வர்க்கம், பாலியல் ஆகிய - வேற்றுமைகள் அற்ற சம வாய்ப்புகள் உள்ள தேசமாக இருக்க வேண்டும் என்பதே. அக்கனவு நிஜமாக அரசியல் செயல்பாடும் அரசியல் தலைமையும் முக்கியமான வழித்தடங்கள் என்பதாலேயே பொது வாழ்வில் லட்சுமி ராமசந்திரன் ஈடுபட்டுள்ளார். 

bottom of page